வருமான வரித்துறை பட்டியலில் உள்ள ஊழல் அமைச்சர்கள் பெயரை வெளியிடவேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் குடி தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து மழைக்காலம் வர உள்ளது.

எனவே மழை நீர் சேமிப்புக்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். வருமான வரித்துறை தமிழகத்தில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பெயர் பட்டியலை உரிய ஆதாரத்துடன் கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல.

சம்பந்தப்பட்டவர்களின் பெயர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியாவில் மூத்த அரசியல்வாதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இலக்கியவாதி. எல்லோரோடும் நட்பு பாராட்டக் கூடியவர். எம்.எல்.ஏ. ஆகி வைர விழா காண்கிறார்.

எனவே, ஒரு மாமனிதர் என்ற ரீதியில் அவரது சட்டமன்ற வைரவிழாவை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடக்கூடாது. அது கலைஞருக்கு பெருமை சேர்க்காது என்பதைதான் நான் தெரிவித்து இருந்தேன். ஆனால் ஆர்.எஸ்.பாரதி மதவாத கட்சியை அழைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க. ஊழல் முத்திரை குத்தப்பட்ட கட்சி. அந்த கட்சியோடு உறவு தேவை இல்லை. எங்களையும் அழையுங்கள் என்று நாங்கள் கேட்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. கருணாநிதியின் பொது வாழ்க்கையையும் நாடு முழுவதும் வைத்திருக்கும் நட்பையும் ஒரு குறுகலான கட்சி வட்டத்துக்குள் சுருக்காதீர்கள் என்று சொன்னதை அரசியல் நாகரீகம் இல்லாமல் விமர்சித்து இருப்பது தி.மு.க.வின் மனப்பான்மையை காட்டுகிறது.

பா.ஜனதாவை மதவாத கட்சி என்று தண்டோரா போடுபவர்கள் எங்களோடு கூட்டணி அமைத்து எல்லா சுகங்களையும் அனுபவித்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதை உணர வேணடும்.

விவசாயிகளின் பிரதிநிதி போல் தன்னை காட்டிக் கொள்ளும் அய்யாக்கண்ணு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கோரிக்கைகளுக்காக கூட தமிழக அரசிடம் முறையிட விரும்பவில்லை. பிரதமருக்கு எதிராகவே போராட போகிறோம்.

இதில் இருந்தே அவரது நோக்கம் புரிகிறது. மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தினால் விவசாயிகளுக்கு பாதுகாப்பும், இரட்டிப்பான சலுகைகளும் கிடைக்கும் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனவே மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடுவது எளிதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.